ஜோகூர் பாரு, ஆக. 7 –
ஜோகூர் மாநிலத்தின் முன்னேற்றம் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் இணக்கத்துடனும் செயல்படுவதன் மூலமே சாத்தியமாகும் என ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஒன் ஹபிஸ் காசி வலியுறுத்தினார்.
'பங்சா ஜோகூர்' (Bangsa Johor) என்ற ஒற்றுமைக் கொள்கையின் அடிப்படையில், 2030ஆம் ஆண்டுக்குள் ஜோகூரை முன்னேறிய மாநிலமாக மாற்றும் இலக்கு சரியான பாதையில் முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சி, உயர்ந்த வருமானம் தரும் வேலைவாய்ப்புகள் மற்றும் அனைத்து மக்களுக்கும் பயன் அளிக்கும் முழுமையான வளர்ச்சி ஆகியவை இதற்கு அடித்தளமாக இருக்கும் என்றும் கூறினார்.
ஜோகூர் மாநில இளைஞர்கள் வேறு மாநிலங்களுக்கோ வெளிநாடுகளுக்கோ வேலைக்காகச் செல்ல வேண்டிய அவசியமின்றி, தங்கள் சொந்த மாநிலத்திலேயே உயர்ந்த வருமானம் தரும் வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்காக தரமான கல்வி, மனிதவள மேம்பாடு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இன்று ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அப்பள்ளி தொடங்கப்பட்டதிலிருந்து ஜோகூர் மாநில மந்திரி புசார் ஒருவர் அதிகாரப்பூர்வமாக வருகை தந்தது இதுவே முதல் முறை என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும் என்றார்.
அனைத்து வகைப் பள்ளிகளின் கல்வி வளர்ச்சியிலும் மாநில அரசு சமமான அக்கறை செலுத்துவதை இந்த வருகை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.
தமது உரையில், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்களில் ஒருவர் ஏர்ஏசியா விமானியாகவும், மற்றொருவர் 'ஓராங் மூடா ஜோகூர்' கல்வி உதவித்தொகை பெற்று இங்கிலாந்தின் இம்பீரியல் கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மாணவராகவும் சாதனை படைத்திருப்பதை சுட்டிக்காட்டினார்.
வாய்ப்பும் விடாமுயற்சியும் இருந்தால் ஜோகூர் மாணவர்கள் உலக அரங்கில் சாதிக்க முடியும் என்பதற்கு அவர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர் என்றார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்களுடன் நேரடி கலந்துரையாடல் மற்றும் கேள்வி–பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாணவர்கள் தலைவர்களை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெறுவது அவர்களின் கல்வி ஆர்வத்தையும் உயர்ந்த இலக்குகளை நோக்கிச் செல்லும் மனப்பாங்கையும் அதிகரிக்கும் என மந்திரி புசார் தெரிவித்தார்.
முன்னதாக துன் அமினா தமிழ்ப்பள்ளிக்கு மேற்கொண்ட வருகையின்போது வழங்கிய வாக்குறுதியின்படி அப்பள்ளியின் பயன்பாட்டு கட்டணப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், மாநில அரசு அளிக்கும் ஒவ்வொரு வாக்குறுதியும் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியின் வசதிகளை மேம்படுத்த வெ.200,000 சிறப்பு நிதியை ஜோகூர் மாநில அரசு ஒதுக்கியுள்ளதாக அவர் அறிவித்தார்.
பள்ளி நிர்வாகம் வெ.107,000 மட்டுமே கோரியிருந்தபோதிலும், பள்ளியின் நிலையை நேரில் பார்வையிட்டபின் கூடுதல் தேவைகள் இருப்பதை கருத்தில் கொண்டு ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.
இந்த நிதியின் மூலம் பள்ளி மண்டபம், கூரையுடன் கூடிய நடைபாதை, குளிர்சாதன வசதி, துருப்பிடித்த படிக்கட்டுகள், மின்சார சுவிட்ச் அமைப்பு, தண்ணீர் பம்பு, வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.
பள்ளி நிர்வாகமும் பெற்றோர்–ஆசிரியர் சங்கமும் இந்த நிதியை முழுமையாகப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் சிறந்த கல்விச் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை மதித்து, எதிர்காலத்தில் வெற்றி பெற்ற பின்னர் ஜோகூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் கெமெலா சட்டமன்ற உறுப்பினரும் ஜோகூர் மாநில மஇகா தலைவருமான கே. ரேவன் குமார், காஹாங் சட்டமன்ற உறுப்பினரும் ஜோகூர் மாநில கல்வி மற்றும் தகவல் தொடர்புத் துறை துணை ஆட்சிக்குழுத் தலைவருமான வி. ருகிந்திரன், ஜோகூர் மாநில கல்வித் துறை அதிகாரி ரவீந்திரன், துணை கல்வி இயக்குநர் ஹாஜி கமால், பள்ளி நிர்வாக சபைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ். கிருஷ்ணன், தலைமையாசிரியர் ப.குணாளன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments