loader
எஸ்.பி.எம் தமிழ்மொழிப் பாடத் தேர்வில் மாணவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் நீக்கப்பட வேண்டும்! – சிவமலர் கணபதி வலியுறுத்தல்

எஸ்.பி.எம் தமிழ்மொழிப் பாடத் தேர்வில் மாணவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் நீக்கப்பட வேண்டும்! – சிவமலர் கணபதி வலியுறுத்தல்

கோலாலம்பூர், ஜூன் 2 –

எஸ்.பி.எம் தேர்வில் விருப்பப் பாடமாக தமிழ்மொழியைத் தேர்வு செய்ய விரும்பும் மாணவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் குறித்து கல்வி அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிகேஆர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் மத்திய தலைமைக் குழு உறுப்பினருமான சிவமலர் கணபதி வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் ஸ்ரீ முருகன் நிலையத்தின் நிர்வாகி சுரேன் கந்தா அவர்கள் வெளியிட்ட செய்தி அறிக்கையின் மூலம் அவர் முன்வைத்துள்ள பிரச்சினைகள் கவலைக்குரியவை என்றும், மாணவர்களின் மொழிக் கல்வி உரிமை மற்றும் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கும் விவகாரமாக இதனை அணுக வேண்டும் என்றும் சிவமலர்  தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு நாடு முழுவதும் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் சேர்ந்த 13,688 மாணவர்களில், 2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தை எழுதியவர்கள் வெறும் 7,609 பேர் மட்டுமே எனக் குறிப்பிட்ட அவர், இது சுமார் 45 விழுக்காடு வீழ்ச்சியைக் காட்டுவதாகச் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

இந்த வீழ்ச்சி பள்ளி மட்டத்திலான அமலாக்கம், நிர்வாக நடைமுறைகள் குறித்தும் பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே உள்ள  விழிப்புணர்வு உட்பட மேலும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்மொழிக் கல்விக்கு வழங்கப்படும் ஆதரவு போன்ற அம்சங்கள் குறித்து பல கேள்விகளை எழுப்புவதாக அவர் கூறினார்.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமிழ்மொழிக் கல்விக்கான அணுகலை எளிதாக்கும் வகையில் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய கல்வி அமைச்சுக்கு உத்தரவிட்டதை நினைவுகூர்ந்த சிவமலர், அது சமூகத்தின் நீண்டகால கோரிக்கைகளுக்கு சாதகமான நடவடிக்கையாக அமைந்ததாக தெரிவித்தார்.

அதேபோல், மலாயா பல்கலைக்கழகத்தில் 2024ஆம் ஆண்டு திருவள்ளுவர் இருக்கை நிறுவப்பட்டதும், தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் ஆய்வுகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தேவையற்ற நிர்வாகத் தடைகள் இன்னும் தொடர்வதாகக் கூறிய அவர், கடந்த ஆண்டு பாங்கியில் நான்கு மாணவர்கள் தமிழ்மொழி எஸ்.பி.எம். பாடத்திற்குப் பதிவு செய்யத் தடுக்கப்பட்ட சம்பவத்தை எடுத்துக்காட்டினார்.

பொதுமக்கள் மற்றும் பல தரப்பினரின் தலையீட்டிற்குப் பிறகே அந்த முடிவு மாற்றப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்மொழி போன்ற அங்கீகரிக்கப்பட்ட பாடத்தைப் படிக்கவும் தேர்வெழுதவும் மாணவர்கள் தேவையற்ற அலுவலகச் சிக்கல்களையும் முரண்பட்ட விதிமுறை விளக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கக்கூடாது. கல்வி மற்றும் மொழி உரிமைகள் நிர்வாகச் சிக்கல்களால் பாதிக்கப்படக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

எனவே, தமிழ்மொழிப் பாடத்தில் மாணவர்கள் பங்கேற்பு குறைந்து வருவதற்கான காரணங்களை கல்வி அமைச்சு முழுமையாக ஆய்வு செய்து, தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் எந்தத் தடையும் இன்றி தமிழ்மொழிக் கல்வியையும் தேர்வையும் அணுகக்கூடிய வகையில் நாடு தழுவிய தெளிவான கொள்கையை அமல்படுத்த வேண்டும் என சிவமலர் கணபதி கேட்டுக்கொண்டார்.

தமிழ்மொழிக் கல்வியின் எதிர்காலம் ஒவ்வொரு பிரச்சினையும் எழும் போதும் தனித்தனியான தலையீடுகளின் அடிப்படையில் அமையக் கூடாது என்றும், நிலையான, வெளிப்படையான மற்றும் மாணவர் நலனை மையமாகக் கொண்ட தீர்வு அவசரமாக தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments

leave a reply

Recent News