ஷாஆலம், மே 8-
மலேசிய இந்திய இளம் கால்பந்து வீரர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் MISC டச்ட்ரானிக்ஸ் கிளப், 2026 எப்ஏஎம் பிரசிடென்ட் கிண்ண 20 வயதுக்குட்பட்டோர் லீக் தொடரில் ஆறு இந்திய இளம் வீரர்களை இணைத்து களமிறங்கியுள்ளது.
இந்த சீசனில் மொத்தம் 11 அணிகள் போட்டியிடும் நிலையில், டச்ட்ரானிக்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் கூச்சிங் சிட்டி அணியை எதிர்கொண்டது. கடுமையான போட்டியாக அமைந்த இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஆட்டத்தின் 81ஆவது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ-கிக் வாய்ப்பை அணியின் கேப்டன் பிரவினாஷ் திறமையாக கோலாக மாற்றி அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். பின்னர் இறுதிக்கட்டத்தில் கூச்சிங் சிட்டி அணி சமநிலை கோல் அடித்தாலும், பிரவினாஷின் தலைமைத்துவமும் நிதானமான ஆட்டமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
18 வயதான பிரவினாஷ், டச்ட்ரானிக்ஸ் கிளப்பின் மிகுந்த நம்பிக்கை அளிக்கும் இளம் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 18 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடிய அவர், தொடர்ந்து சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அவரது கடின உழைப்பு, தலைமைத்துவ பண்புகள் மற்றும் விளையாட்டு திறனை மதித்து, இந்த சீசனில் அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- காளிதாசன் இளங்கோவன்
0 Comments